×

வேலூர் மாவட்டத்தில் வேளாண் விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை தொடங்கியது

*அதிகாரிகள் தகவல்

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் வேளாண் விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2022-23ம் நிதியாண்டில், வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், வேளாண்மை விரிவாக்க மையங்களில் புதிய மின்னணு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பணமில்லா பரிவர்த்தனை முறை செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் அறிவித்தார். இதையடுத்து, விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இடுபொருட்களை பெறும்போது தங்களது பங்களிப்பு தொகையை இ-செலான், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை (யு.பி.ஐ), மூலம் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து, கடந்தாண்டு முதற்கட்டமாக சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் ஒவ்வொரு வட்டாரத்தில் சோதனை முறையில் பணமில்லா பரிவர்த்தனை முறை யல்படுத்தப்பட்டது. தற்போது, அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை முறை பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள 7 வட்டாரங்களில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேளாண் இணை இயக்குனர் சோமு கூறுகையில், ‘வேலூர் மாவட்டத்தில் 7 ஒன்றியங்களில் நடப்பாண்டு முதல் வேளாண் இடுபொருட்களுக்கான பணபரிவர்த்தனை மின்னணு மூலம் மேற்கொள்ளும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. இதற்காக வேலூர், காட்பாடி, கணியம்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம், பேரணாம்பட்டு, குடியாத்தம் ஆகிய 7 ஒன்றியங்களுக்கு வேளாண் இடுபொருட்கள் விற்பனை செய்யும் விதைவிற்பனை மையங்களில் ‘ஸ்வைப்பிங் மெஷின்கள்’ வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இனி வேளாண்மை பொருட்கள் பெற ஏடிஎம் கார்டு, கூகுள்பே முறையில் பணம் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்’ என்றார்.

The post வேலூர் மாவட்டத்தில் வேளாண் விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Agricultural Extension Centers ,Vellore district ,Vellore ,Tamil ,Nadu ,Assembly ,Dinakaran ,
× RELATED வேலூர் மாவட்ட எல்லையில் 5 மதுக்கடைக்கு...